பல்கலை விடுதியில் மோதல் ; 5 மாணவர்கள் மருத்துவமனையில் !
களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கர விடுதியில் இடம்பெற்ற மோதலில், தாம் தாக்கப்பட்டதாக கூறி 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதியானதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தரப்பு மாணவர்களுக்கும் முன்னணி சோசலிஷ கட்சி ஆதரவு தரப்பு மாணவர்களுக்குமிடையில் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
வைத்தியசாலையில் மாணவர்கள்
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மக்கள் விடுதலை முன்னணி தரப்புக்கு ஆதரவான ஐந்து மாணவர்களே ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து மாணவர்களும் அறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை தாம் பாதுகாப்பாக மீட்டு வீட்டுக்கு அனுப்பிய போதிலும் அவர்கள் வீடுகளுக்குச் செல்லாமல் வைத்தியசாலையில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் களனி பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில் களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.