ஆசிரியையின் பணப்பை திருடி கைவரிசை காட்டிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்!
ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி அதிலிருந்த ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுத்த சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த எ.டி.எம் அட்டையை பயன்படுத்தி வங்கிக்கணக்கில் இருந்து 20000 ரூபா பணத்தை திருடியதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மஹாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாமில் பணிபுரியும் திய மெதகம, தியவிட்டகம பகுதியை சேர்ந்த 41 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 01ஆம் திகதி ஹோபரிய பகுதியில் வசிக்கும் ஆசிரியை ஒருவரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பை திருடப்பட்டுள்ளதாக கிராதுருகோட்டை பொலிஸ் நிலையத்தில் அந்த ஆசிரியை முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, கிராதுருகோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெத்திருந்ததனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், சந்தேக நபர் தெஹியத்தகண்டிய நகருக்கு மற்றுமொரு நபருடன் சென்று வங்கிக்கணக்கில் பணம் எடுத்துச் செல்லப்பட்டமை உறுதிபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.