ஜனாதிபதி நாற்காலி தொடர்பில் பலருக்கு வலைவீசும் சிஐடியினர் !
போராட்டகாரர்களால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டபோது ஜனாதிபதி அமரும் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதி அமர்ந்திருக்கும் பிரதான நாற்காலியில் அமர்ந்து உரையாடியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை தெரணியகல பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்தனர். அதேசமயம் ஜனாதிபதி அமர்ந்திருந்த நாற்காலியில் சந்தேக நபர் அமர்ந்திருக்கும் போது ஏனைய நாற்காலிகளில் இருந்தவர்களை அடையாளம் காணவும் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சமன்புரகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர், கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதியானதை அடுத்து போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.