கொழும்பில் பிரபல ஊடக நிறுவனத்திற்குள் நுழைந்த சிஐடி
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக் குழுவொன்று கொழும்பிலுள்ள பிரபல சிங்களப் பத்திரிகையின் அலுவலகத்திற்கு விரைந்துள்ளது.
குறித்த பத்திரிகையில் நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளரான துஷான் குணவர்தனவினால் தெரிவிக்கப்பட்ட சதொச நிறுவன வெள்ளைப் பூண்டு மோசடி குறித்த செய்தி அண்மையில் வெளிவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த ஊடகவியலாளர்களுக்கு சி.ஐ.டி அழைத்த போதிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெறுமவின் தலையீட்டினைத் தொடர்ந்து விசாரணை நிறுத்தப்பட்டதாக அமைச்சர் டலஸ் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
எனினும் இன்று நண்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவு குழு, கொழும்பு 02இல் உள்ள ஹுனுப்பிட்டியவில் அமைந்திருக்கும் குறித்த நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது, விசாரணைக்கு தற்போது சமூகமளிக்க முடியாதென குறித்த பத்திரிகை ஆசிரியரால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிஐடியினர் அங்கிருந்து சென்றதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.