சித்திரை புத்தாண்டு ; மின்சாரம் வழங்க மின்சார சபை தயார்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விழாக்கள் மற்றும் இம்மாதம் நாடு முழுவதும் நடைபெறவுள்ள பல்வேறு கொண்டாட்டங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை ஏற்பாடுகளை செய்துள்ளதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

புத்தாண்டு விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள்
தேவையான கட்டணங்களைச் செலுத்தியவுடன் இவ்வாறான நிகழ்வுகளுக்கு மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 19 வரையான காலப்பகுதியில், உரிய கொடுப்பனவுகளை நிறைவு செய்வதன் மூலம் ஏற்பாட்டாளர்கள் இலங்கை மின்சார சபையிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
புத்தாண்டு விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளுக்கு மின்சாரம் அத்தியாவசியமானது என்பதை அங்கீகரிக்கும் அதேவேளையில், பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றோம்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த கொண்டாட்டங்களுக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கு தேவையான ஆதரவை இலங்கை மின்சார சபை வழங்கும் என்றார்.