சீன தம்பதியின் மோசமான செயல் ; மடக்கிப்பிடித்த இலங்கை அதிகாரிகள்
கணினி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து இன்று (10) அதிகாலை வருகை தந்த 35 மற்றும் 31 வயதுடைய சீன நாட்டுத் தம்பதியினரே, விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக பொருட்களைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
இவர்களது பயணப் பொதிகளிலிருந்து 84 பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் கையடக்கத் தொலைபேசிகள், 10,000 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் 40 கிலோகிராம் சீனப் பாக்கு என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர்கள் சீனாவிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சீனப் பிரஜைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பொலிஸாரின் விசேட விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.