மன்னாரில் திடீரென இரத்து செய்யப்பட்ட இலங்கைக்கான சீன தூதுவரின் நிகழ்வு!
வட மாகாணத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை இலங்கைக்கான சீன தூதுவர் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, வவுனியா, யாழ்ப்பாணத்தை தொடர்ந்து இன்றைய தினம் (07-10-2023) மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவு பொருட்களை கையளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று மன்னார் செஞ்சிலுவை சங்கத்தில் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த நிகழ்வு திடீரென இரத்து செய்யப்பட்டது.
மன்னார் செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்ச்சியாக காணப்பட்ட நிலையில் சர்சைக்குரிய விதமாக மன்னார் செஞ்சிலுவை சங்க கிளையினை பூட்டு போட்டு மூடிய முன்னாள் தலைவரின் தலைமையில் இந்த நிகழ்வு செஞ்சிலுவை சங்க மன்னார் கிளையில் ஒழுங்கு செய்யப்பட்டதன் அடிப்படையில் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் நகர் பகுதியில் உலர் உணவு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இரத்து செய்யப்பட்ட நிலையில் மன்னார் வங்காலை பகுதியை சார்ந்த தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு மாத்திரம் உலர் உணவு கையளிக்கும் நிகழ்வு மாத்திரம் இடம் பெற்றிருந்தது.
குறிப்பாக இலங்கைக்கான சீனாவின் உயர்ஸ்தானிகரின் நிகழ்வு ஒன்று உரிய விதத்தில் ஒழுங்குபடுத்தப்படாமல் இரத்து செய்யப்பட்டுள்ளமை பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.