ஆயிரம் நாட்களுக்கு பின்னர் காவலில் வைக்கப்பட்டிருந்த இரு கனேடியர்களை விடுவித்த சீனா!
சீனக் காவலில் வைக்கப்பட்டிருந்த இரு கனேடிய பிரஜைகள் ஆயிரம் நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு திரும்பியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)உறுதிப்படுத்தியுள்ளார்.
சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்குப் பிறகு வெள்ளியன்று கனடாவை விட்டு வெளியேறினார். இந்தநிலையில், சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)கூறுகையில், ‘
அவர்கள் நம்பமுடியாத கடினமான சோதனையை சந்தித்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுக்குச் செல்கிறார்கள் என்பது எங்களுக்கு ஒரு நல்ல செய்தி. கடந்த 1,000 நாட்களாக, அவர்கள் வலிமை, விடாமுயற்சி, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றைக் காட்டியுள்ளனர்’ என ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறினார்.
இதேவேளை கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூவை கனேடிய பொலிஸார் கைதுசெய்தனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீறியதாகக் கூறி, அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கனேடிய அரசாங்கம் பின்னர் விளக்கம் அளித்தது.
இதன் காரணமாக , ஆத்திரமடைந்த சீனா, அதற்குப் பழி வாங்கும் வகையில் அதே ஆண்டு கனடாவை சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் வர்த்தகர் மைக்கேல் ஸ்பாவோர் ஆகியோரை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சீனாவில் வைத்து கைதுசெய்தது.
அத்துடன் அவர்கள் இருவரும் உளவு பார்த்ததாகவும் சீனா குற்றஞ்சாட்டிய அதேவேளை, மெங்கை கைது செய்ததற்கு பதிலடியாக, கனேடியர்களை சீனா தடுத்து வைத்திருப்பதாக விமர்சகர்கள் கூறிய நிலையில் சீனா அதனை கடுமையாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
