இதுவரையில் ஒருவர்கூட உயிருடன் மீட்கப்படவில்லை! வெளியான அதிர்ச்சி தகவல்
சீனா ஈஸ்டர்ன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 735 எம்யூ5735 விமானம் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த பகுதியில் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை. விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இந்த விபத்து சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான முழு விசாரணைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்தோர் குறித்த விவரம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.
இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது. இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், யுனான் மாகாணத்தில் உள்ள ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் குவாங்சு விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.
"கணவரை இழந்துவிட்டேன்" புதிதாக திருமணமான பெண் ஒருவர் தன் கணவரை இந்த விபத்தில் இழந்துவிட்டதாக, WeChat பதிவில் தெரிவித்துள்ளார். அவர் தன் முந்தைய பதிவுகளில் கணவருடன் சென்ற சுற்றுலா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த விமானத்தில் பயணித்தவர்கள் யார், விமானக்குழுவினர் யார் என அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுள், 6 பேர் கொண்ட குழு, இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பயணித்ததாக தெரியவந்துள்ளது.
அக்குழுவில் தன்னுடைய சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்களும் இருந்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். "நான் மிகுந்த வேதனையில் உள்ளேன்" என, அவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
அந்த விமானத்தில் பயணித்த டான் என்பவரின் அலுவலக சகா ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், டான் குடும்பத்தினரிடம் தான் இந்த செய்தியை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
"அவர்கள் அழுதுகொண்டிருக்கின்றனர். இதனை அவருடைய தாய் நம்பவில்லை. தன் மகன் சீக்கிரம் வந்துவிடுவார் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார். டானுக்கு 29 வயதுதான் ஆகிறது" என்றார்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விமானத்தில் பயணித்தோரின் குடுபத்தினரை அழைத்துச் செல்லும் பணியில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் விமானியின் குறைபாடா அல்லது பாதுகாப்பு குறைபாடா, விமான வடிவமைப்பு மற்றும் வானிலை காரணமா என, பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.