இலங்கை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கிய சீனா
2026 ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடை துணிகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளைச் சேர்ந்த 44 இலட்சத்து 18 அயிரத்து 404 மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கான ஒப்பந்தச் சான்றிதழ்களை பரிமாறிக் கொள்ளும் அதிகாரப்பூர்வ விழா நேற்று (11) பத்தரமுல்லை - பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் சீனத் தூதுவர் கி ஸென்ஹோங் ஆகியோர் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினர்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான சான்றிதழ்கள் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் சீனத் தூதுவர் கி ஸென்ஹோங் ஆகியோரிடையே பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன, ”2025 ஆம் ஆண்டுக்காக சீனா இலங்கைக்கு ரூ.5.17 பில்லியன் மதிப்பிலான 11.82 மில்லியன் மீற்றர் சீருடை துணியை நன்கொடையாக வழங்கி, 4.6 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயனளித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கும் இதே போன்ற பங்களிப்பை வழங்கும் சீனாவின் உறுதி, இரு நாடுகளின் நட்பை மேலும் வலுப்படுத்தும்” என குறிப்பிட்டார்.