ரஷியா தாக்குதலினால் இடிபாடுகளுக்குள் குழந்தைகள் மக்கள் சிக்கி தவிப்பு; உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் இன்று 14-வது நாளாக நீடித்து வருகிறது.
உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய படைகள் பேரழிவு தாக்குதல்களை நடத்தி வரும் அதே வேளையில், கடந்த சில நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்து வருகிறது.ஆனால் எந்த ஒரு போர் நிறுத்தமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததுதான் சோகம்.
போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க முடியாத சூழலுக்கு இருநாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதில் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
மரியுபோல் நகரத்தின் கவுன்சில் சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான பதிவு வெளியிடப்பட்டது. அதில், மிகப்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி(Vladimir Zhelensky) வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ இடிபாடுகளுக்குள் குழந்தைகள்,மக்கள் சிக்கியுள்ளனர்.
இது மிகப்பெரும் கொடுமை” எனப்பதிவிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.