7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு ; சித்தப்பாவுக்கு 9 ஆண்டு சிறை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அவரது சித்தப்பாவுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (24) கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குற்றவாளிக்கு முதல் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
2007இல், சிறுமியின் தந்தையின் சகோதரரான அப்போது 32 வயதுடைய குற்றவாளி, சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மீது மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு குற்றச்சாட்டுகளும் சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியரின் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டன.
இதனடிப்படையில், செப்டம்பர் 11, 2025 அன்று சந்தேகநபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
நேற்றைய தீர்ப்பு விசாரணையில், நீதிபதி பிரபாகரன் குற்றவாளிக்கு மேற்கண்ட தண்டனைகளை விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இழப்பீட்டை வழங்கத் தவறினால், குற்றவாளி கூடுதல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.