பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகையை வழிபட்டார் முதலமைச்சர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை
தமிழ் நாட்டு முதலமைச்சர் விஜய் , கர்நாடகாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு இன்று சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
கோவில் வளாகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய்யை கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

வெள்ளி வாள் காணிக்கை....
தொடர்ந்து அர்ச்சகர்கள் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதன் பின்னர் சாமி தரிசனம் செய்த முதல்வர், 1 கிலோ 600 கிராம் எடையுள்ள 2.5 அடி நீள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களின் சினிமா, அரசியல் வெற்றிக்காக கொல்லூர் மூகாம்பிகையை வழிப்படுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், மூகாம்பிகை நதிக்கரையில் அமைந்துள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில், கல்வி மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாகும்.
ஆதி சங்கரரால் வழிபடப்பட்டு, கொடசாத்ரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில், மூவுலக சக்திகளையும் உள்ளடக்கிய சுயம்பு லிங்கத்திற்கு பெயர் பெற்றது.
அதேவேளை தேர்தலுக்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் ஆந்திராவில் உள்ள சாய்பாபா கோவிலுக்கும் விஜய் சென்று வழிபட்டது குறிப்பிடத்தக்கது.