சிங்களப்படைகள் எரித்த செல்வச் சந்நிதியானின் சித்திரத்தேர்!
ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் ஒன்றாகும்.
யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும்.
உலகில் நான்காவது உயரமான சித்திரத்தேர்
இக்கோயில் ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது.
இங்கு வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றிவரவுள்ள அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன.
ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் தான் பார்க்க முடியும். இங்கு முருகனின் கையிலுள்ள வேலை வைத்து வழிபடும் முறை தொன்றுதொட்டு காலமாக வழக்கத்திலுள்ளது.
இவ்வாலயத்தில் முருகப்பெருமான் வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கின்றார். இலங்கையில் அநேக அன்னதான மடங்களைக் கொண்ட ஆலயம் சந்நிதி முருகன் ஆலயம்தான்.
இதனால் தான் சந்நிதி முருகனை, அன்னதானக் கந்தன் என்றும் அழைப்பார்கள். இலங்கையின் மிக உயரமானதும் உலகில் நான்காவது உயரமானதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திரத் தேர் 20.04.1986 அன்று சிங்கள இராணுவத்தால் தீயிட்டு அழிக்கப்பட்டமை இந்துக்கள் மத்தியில் மாறாத வடுவாக அமைத்துவிட்டது.