இலங்கையில் ஏற்பட்ட குழப்பநிலை: மவுனம் கலைத்த இந்திய அரசு!
இலங்கையில் வன்முறை தொடரும் நிலையில், இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த சில காலமாகவே பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. நிலைமையை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளும் பெரியளவில் பலன் தரவில்லை.
இதன் காரணமாக இலங்கை மக்கள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே, இந்தப் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறிவிட்டது. இதனால் அங்குப் பதற்றமான சூழலே நிலவிறது.
இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு ராஜபக்ஷ அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதன் காரணமாக ராஜபக்ஷ அரசுக்கு உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்திலும் இறங்கினர்.
முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என ராஜபக்ஷ பிடிவாதம் பிடித்தார். இருப்பினும், இலங்கையில் நிலைமை மோசமடைந்ததால் நேற்றைய தினம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இருந்த போதிலும், அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது.
இந்தச் சூழலில் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) பதவி விலகல் குறித்தும் அங்கு ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் மத்திய அரசு முதல்முறையாக சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
இலங்கை மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியா முடிவு எடுக்கும் என்று கூறி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜபக்ஷ அரசின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை, அதேபோல இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து பொருளாதார உதவிகளைச் செய்யும் என்றும் அதேநேரம் அரசியல் ரீதியிலான ஆதரவை வழங்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்,
"அண்டை நாடான இலங்கை உடன் இந்தியா நெருக்கமான வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ரீதியிலான மீட்டெடுப்பிற்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது.
இலங்கை மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே இலங்கைக்கு இந்தியா செய்துள்ள உதவிகளை விவரித்த அவர், "3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைப் போக்க இந்திய மக்கள் உதவி வழங்கியுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யக் கடன், கடனை செலுத்தும் காலம் நீட்டிப்பு என மொத்தம் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளைச் செய்துள்ளது.
மத்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும் கூட இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் அரிசி மற்றும் பிற பொருட்களையும் அனுப்பியுள்ளன. உலக வங்கியின் உதவி உடன் இலங்கைக்கு உதவுவதாக இந்தியாவும் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரியை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிதியத்தின் குழு ஒன்று இப்போது கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் நிதி உதவி திட்டம் குறித்தும், அதற்கு இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்திருத்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று, பொருளாதார வீழ்ச்சி மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால் விவசாயம், ஏற்றுமதி மற்றும் சுற்றுலா என இலங்கையின் அனைத்து முக்கிய துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை நாட்டால் கடனை தக்க நேரத்தில் திரும்பச் செலுத்த முடியாமல் போனது.
இப்போது இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தான் காரணம் என்று கூறி அந்நாட்டு மக்கள் ஆர்ப்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். அங்குள்ள நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
அதேநேரம் அரசியல் ரீதியாக எவ்வித ஆதரவும் கொடுக்க முடியாது என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாகவே உள்ளது. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"அங்கு அரசியல் சூழல் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்கு உதவுவதே அர்த்தமுள்ளதாக இருக்கும்" என்று கூறினார்.
மேலும், இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த துயர நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் மத்திய அரசு கவலை கொண்டுள்ளது.