காலி மாநகர சபை கூட்டத்தில் குழப்பம்! போத்தல்களைக் கொண்டு தாக்குதல்
காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
சபை நடவடிக்கைகளை மாநகர மேயர் ஆரம்பித்தவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது.

மது வாக்குகளைக் கொள்ளையடித்தான்
இதன்போது, "திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்" என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.
எனினும் கோஷங்களுக்கு மத்தியில் விசேட பொதுச் சபைக் கூட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை மேயர் முன்னெடுத்துச் சென்றார்.
அதன் பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டவுடன், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
எனினும் நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார். இந்த தாக்குதலில் பெண் உறுப்பினர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.