மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்!
மன்னார் மாவட்ட மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை உருவாக்கி, அதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு
தொடர்ந்து உரையாற்றிய அவர், மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே மூன்றாம் நிலை சிகிச்சை மருத்துவமனையான மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் அதிகபட்சமாக 600 மில்லியன் ரூபாய் நிதி மானியத்தை வழங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த நோக்கத்திற்காக இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, இரு தரப்பினருக்கும் இடையிலான பொருத்தமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் குறிபிட்டார்.