அமெரிக்க விசா விதிகளில் மாற்றம் ; இலங்கை அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், புலம்பெயராதோர் விசா (Non-immigrant visa) விண்ணப்பதாரர்களுக்கான சமூக வலைதள கணக்கு பரிசோதனை நடைமுறைகளை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 30 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதிகளின்படி, குறிப்பிட்ட சில விசா வகைகளின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக வலைதளக் கணக்குகளின் (Social Media Profiles) தனியுரிமை அமைப்புகளை (Privacy Settings) 'Public' அல்லது 'Open' நிலைக்கு மாற்ற வேண்டும் எனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி A-3, C-3 (வீட்டுப் பணியாளர்கள் எனில்), G-5, H-3 மற்றும் அவர்களின் கீழ் தங்கியிருப்பவர்கள் (H-4),K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T மற்றும் U ஆகிய விசா பிரிவுகளுக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விசா நேர்முகத் தேர்விற்கு (Interview) முன்னதாகவே இந்த மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும் எனத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
விண்ணப்பதாரர்களின் பின்னணியைச் சரியாக ஆய்வு செய்வதற்காகவே (Vetting process) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட விசா வகைகளின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், நேர்முகத் தேர்விற்குச் செல்வதற்கு முன் தங்களது சமூக வலைதளக் கணக்குகளை பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியமாகும்.