அநுராதபுரம் சிறைக்குள் நுழைந்த சாணக்கியன் - சுமந்திரன்
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று விஜயம் செய்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைதிகள் இருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பில் விசாரணைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், சுமந்திரன் உள்ளிட்ட சிலர், அனுராதபுரம் சிறைக்கு சென்று கைதிகளை சந்தித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்ட பின்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இன்று காலை சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர். சிறையில் இராஜாங்க அமைச்சரொருவரால் அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகளை பார்வையிட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன்,
இராஜாங்க அமைச்சரினால் துன்புறுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்து பேசியிருக்கின்றோம். கடந்த 12 ஆம் திகதி சிறைச்சாலைக்கு பொறுப்பாக இருந்த இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்கு வந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இருக்கின்ற கைதிகளை தன் முன்பாக கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
அத்துடன் அரசியல் கைதிகளை மிரட்டி அனைவரையும் முழங்காலில் நிற்க வைத்து மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் பற்றியும் அதில் இருவரை மிகவும் கூடுதலாக பயமுறுத்தி தன்னுடைய கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து சுடுவதற்கு ஆயத்தமான விடயங்கள் அனைத்தையும் நாங்கள் நேரடியாக கேட்டறிந்துள்ளோம். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
தற்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமித்துள்ள விசாரணைக்குழுவும் விசாரணை செய்கின்றது. இதனைவிடவும் கூடுதலான விசாரணைகள் இடம்பெறும் என நாம் அறிகின்றோம். இந்த சம்பவங்கள் உண்மையாக இடம்பெற்ற நிகழ்வுகள் , இதில் எவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.
கடந்த நாடாளுமன்ற தினத்தில் இவ்விடயம் எழுப்பப்பட்ட போது இந்த விடயத்திற்கு பொறுப்பாக உள்ள அமைச்சரவை அமைச்சரான நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என நாம் கோருகின்றோம் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.