பிரபல வானொலி அறிவிப்பாளர் கைது
முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொரள்ளை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tocilizumab என்ற மருந்து வகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, விற்பனை செய்யும் நோக்குடன் தனது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
இந்த மருந்தை தயாரிப்பதற்கான காப்புரிமை உலகில் ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே இருப்பதாகவும், அந்த மருந்தின் அதிக தேவை காரணமாக மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளிற்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்தின் விலை 125,000 ரூபா என்றும், 700,000 ரூபாவிற்கு கருப்பு சந்தையில் விற்பனை செய்யும் குழு பற்றிய தகவல் கிடைத்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இணையத்தளங்களில் விளம்பரப்படுத்தி இந்த விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் வைத்தியசாலையொன்றின் முன்பாக மருந்து விற்க வந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, ஏனைய இருவரும் கைதாகி நிலையில் அதில் ஒருவரே தமிழ் அறிவிப்பாளர் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை தெமட்டகொடையிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் 5 Tocilizumab மருந்து பெட்டிகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.