சிசிரிவி கமராக்கள் பொருத்தப்படவில்லை: கைவிரித்த சிறைச்சாலை தலைமையகம்
வெலிக்கடை சிறைச்சாலை வளாகம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பூஸா, அங்குனகொலபெலஸ்ஸா மற்றும் கதத்தாரா சிறைகளில் மட்டுமே சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறைத்துறை முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவால் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணையில் சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்த முடியாது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், நாட்டின் ஒவ்வொரு சிறையிலும் நுழையும் எந்தவொரு நபரின் பதிவுகளையும் வைத்திருக்க ஒவ்வொரு சிறையிலும் ஒரு 'பதிவுப் புத்தகம்' இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். குறிப்பாக இதுபோன்ற பல 'பதிவுப் புத்தகங்கள்' சிறைகளின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ளன.
முன்னாள் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் லொஹான் ரத்வத்த, கைதிகள் தினமான கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைக்குள் மதுபோதையில் நுழைந்து, இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்துகொலை செய்வதாக மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிரிவி காட்சிகளை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுத் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தார்.