ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு
வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், சதோச நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிமேஷா சஞ்சீவனி அளித்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், மேலதிக வழக்கு விசாரணையை ஒக்டோபர் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். 2010 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய போது, சதொச நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் "ஊழல்" எனப்படும் குற்றத்தைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டி,
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளரான மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.