மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பல் உல்லாசக் கப்பலுடன் மோதி விபத்து
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பலொன்றுடன் உல்லாசக் கப்பல் மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில், 'தி அமெரிக்கன் ஹெரிடேஜ்' (The American Heritage) என்ற உல்லாசக் கப்பல், 'அட்லாண்டிக் ஆஸ்பால்ட்' (Atlantic Asphalt) என்ற சரக்குக் கப்பலுடன் மோதியுள்ளது.

180 பேர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்பு
இதனைத் தொடர்ந்து உல்லாசக் கப்பல் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், குறைந்தது 180 பேர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பல் கவிழ்ந்ததைத் தொடர்ந்து உயிர்காப்பு அங்கிகளை அணிந்திருந்த பயணிகள் ஆற்றில் தத்தளித்த நிலையில், மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அருகிலிருந்த ஏனைய சரக்குக் கப்பல்கள் மற்றும் படகுகளும் மீட்புப் பணிகளுக்கு உதவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், 'தி அமெரிக்கன் ஹெரிடேஜ்' கப்பலை இயக்கும் அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பயணிகளும் பணியாளர்களும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரது நலன் குறித்தும் தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உல்லாசக் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டதுடன், சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். லூசியானா மற்றும் மிசிசிப்பி மாநிலங்களில் உள்ள மிசிசிப்பி ஆற்றுப் பகுதிகளை உள்ளடக்கிய எட்டு நாள் சுற்றுலாப் பயணத்தை நிறைவுசெய்யும் தருணத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சரக்குக் கப்பலும் உல்லாசக் கப்பலும் மோதியதற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆற்றுப் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன