தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு ; தப்பிச் செல்ல பயன்படுத்திய கார் மீட்பு
மாத்தறை, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுப் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கார் திக்வெல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (22) இரவில் புதிய பெலியத்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றைச் சோதனையிட முயன்ற போது, அதன் சாரதி காரை நிறுத்தாமல் வேகமாகச் செலுத்தித் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்கால் ஒன்றில் விழுந்து வீதியை விட்டு விலகி நின்றுள்ளதுடன், அதிலிருந்த சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, குறித்த காரே தெவிநுவரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பது பொலிஸாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை வேளையில் காரில் வந்த குழுவொன்று, பிஸ்டல் ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தெவிநுவர, கந்தர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தது.
கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தெவிநுவர பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கெமாராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.