கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த மூவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவிலுள்ள நிறுவனமொன்றுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடமிருந்து சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பில் பணியகத்திற்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நீதிமன்ற உத்தரவு
இதற்கமைய, இந்த மோசடியுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவர் ஏனைய சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்புச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதேவேளை ஏனைய இரு சந்தேகநபர்களும் ஏப்ரல் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அவ்விருவரும் நேற்று (09) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களைப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.