கல்முனை வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிரான பிரசாரம்;அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு
அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரா.சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட ஹிஜாப் விவகாரம், அவதூறுச் பிரசாரங்கள் மற்றும் சமூக மோதலைத் தூண்டும் வகையிலான கருத்துக்களுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு, நேற்றைய தினம் திங்கட்கிழமை (21) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வைத்தியர் அர்ஜுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சர்ச்சைக்குரிய வைத்தியர் அர்ஜுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹாரீஸ் உள்ளிட்ட 6 நபர்களுக்கு எதிராகவும், யூடியூப்மற்றும் ஃபேஸ்புக் ஆகிய 2 சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராகவும் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தன் மீது அவதூறு பரப்புவதைத் தடுக்கும் வகையிலான தடையாணை அல்லது நிபந்தனையுடன்கூடிய கட்டளையைப் பிறப்பிப்பது தொடர்பில் பரிசீலிப்பதற்காக, இவ்வழக்கின் மீதான முடிவை வரும் செப்டம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் மனுதாரரான வைத்தியர் இரா. சுகுணன் சார்பில் சட்டத்தரணிகளான டயஸ் மற்றும் க. கிஸோபனா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.