பாடசாலை பேருந்து சேவைக்கான செலவை அரசாங்கத்தால் ஏற்க முடியாது
சிசு செரிய பாடசாலை பேருந்து சேவைக்கான முழு செலவையும் அரசாங்கத்தால் ஏற்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் வகையில் இன்று (30) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இதற்கு கட்டணம் அறவிடப்படும் என தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி மாணவர் பேருந்து சேவையை வழங்குவதில் உரிய கட்டணத்தில் 70% அரசால் வழங்கப்படும் என்றும் மீதமுள்ள 30% பெற்றோரிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
பணம் செலுத்த முடியாத பெற்றோர்கள் இருந்தால் அதாவது ஏழை மானியம் பெறும் குடும்பங்களின் குழந்தைகள் இருந்தால் கட்டணம் ஏதுமின்றி சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
30% கூட மீளப்பெற முடியாவிட்டால் சேவை முற்றாக நிறுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.