விளையாட்டு வீரர்களுக்கு அரச துறையில் நிரந்தர நியமனம் ; அமைச்சரவை அதிரடித் தீர்மானம்
தேசிய மட்டத்தில் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீர வீராங்கனைகளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விசேட திறமைகளுடன் கூடிய வெற்றியீட்டிய வீர வீராங்கனைகள், நிரந்தர தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் தமது விளையாட்டுத் துறையிலிருந்து பாதியிலேயே விலகிச் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலைமையானது வீர வீராங்கனைகளின் உயரிய செயலாற்றுகையைப் பேணுவதற்கும், சர்வதேச ரீதியான போட்டித்தன்மையை இலங்கையினால் தக்கவைத்துக் கொள்வதற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

முப்படையில் வீரர்களுக்கு வழங்கக்கூடிய வாய்ப்புகள் போதிய மட்டத்தில் இல்லாமையும், விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் விளையாட்டுத் துறைசார் நிரந்தரத் தொழில் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டுத் துறையில் உயர்மட்டத் திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளைத் தக்கவைக்கவும், அவர்களின் நீண்டகால தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய கொள்கைத் திட்டம் ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, நியாயமான மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்ந்தெடுத்தல் முறையின் ஊடாக அரச, பகுதி அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் இவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
இதற்காகப் பொருத்தமான கொள்கைச் சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான யோசனையை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.