தமிழர் பகுதியில் சவர்காரகட்டிகளுடன் கடற்படையினரிடம் சிக்கிய கெப் வண்டி
இலங்கை கடற்படை கல்பிட்டி, கப்பலடி மற்றும் ரெட்பானா கடற்கரைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்ட 840 Kg பீடி இலைகள் மற்றும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சவர்க்காரக் கட்டிகளுடன் கெப் வண்டியொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

சந்தேகத்திற்கிடமான கெப் வண்டி
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால் கல்பிட்டி கப்பலடி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனையிடப்பட்டது.
அங்கு சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்ட சுமார் 840 Kg பீடி இலைகள் அடங்கிய கையிருப்புடன் கெப் வண்டி ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், இலங்கை கடற்படைக் கப்பல் விஜயவால் கல்பிட்டி ரெட்பானா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள புதருக்குள் ஏழு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1980 சவர்க்காரக் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கெப் வண்டி, பீடி இலைத் தொகுதி மற்றும் சவர்க்காரக் கட்டிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.