இலங்கையில் பொருட்களைக் கொள்வனவு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது அத்துடன் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வர்த்தக நடவடிக்கை
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவ்வதிகார சபை தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைகளைக் காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் லேபிள் விபரங்களை மாற்றியமைத்தல்.
போலித் தள்ளுபடிகள் மற்றும் நுகர்வோரைத் திசைதிருப்பும் வர்த்தக விளம்பரங்கள், தரமற்ற பொருட்களை விற்பனை செய்தல்.
பொருட்களைப் பதுக்கி வைத்தல், இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள்.
அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், நத்தார் கேக் வகைகள், பேக்கரி உற்பத்திகள், இனிப்புப் பண்டங்கள், பரிசுப் பொதிகள், ஆடைகள், பாதணிகள், விளையாட்டுப் பொருட்கள், மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாடசாலை உபகரணங்கள் ஆகியவை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
பிரதான மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், களஞ்சியசாலைகள், பல்பொருள் அங்காடிகள் , உற்பத்தி மற்றும் விநியோக நிலையங்கள், உணவகங்கள், நடமாடும் வியாபாரிகள் மற்றும் விசேட விற்பனை ஊக்குவிப்புத் திட்டங்கள் என்பன இத்திட்டத்தின் கீழ் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள், பணிப்புரைகளுக்கு அமைவாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சகல வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தல், காலாவதியாகும் திகதி மற்றும் லேபிள்களைச் சரிபார்த்தல், தள்ளுபடிகள் மற்றும் விற்பனை நிபந்தனைகள் குறித்து அவதானம் செலுத்துதல், உத்தரவாத அட்டையைப் பரிசோதித்தல் மற்றும் பற்றுச்சீட்டைப் பெற்று அதனைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் அல்லது சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித இலக்கத்தினூடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.