எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணமும் உயர்கிறது!
நாட்டில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்திருக்கும் நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் நிர்ப்பந்தம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 5 ரூபாவாக அதிகரிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று பிற்பகல் கூடுவார்கள் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது நாடு எதிர்கொண்ட நிலைமையினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வாகன உதிரி பாகங்கள் மற்றும் பல சேவைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளதால், தனியார் பஸ் உரிமையாளர்களால் இயக்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதால், அதற்கான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.