கொட்டும் மழையில் மாணவர்களுடன் சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து
ஹட்டன் - பொககவந்தலாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பேருந்தும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து ஹட்டன் - பொககவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் வென்ஞர் தோட்டப் பகுதியில் இன்று காலை நிகழ்ந்துள்ளது.

விபத்தில் , பேருந்தில் பயணித்த ஒரு பாடசாலை மாணவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவயிலிருந்து ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர் திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் உட்பட சுமார் 20 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர் எனவும் தற்போதைய நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என நோர்வூட் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.