கோட்டபாயவின் பிடியில் இருந்து 48 மணி நேரத்தில் தப்பிய பிரித்தானிய தமிழன்
2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரவிக்குமார் நீண்டகாலமாக சட்டவிரோத தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவரை விடுவிப்பதற்காக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா உள்ளிட்டோர் கடுமையான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
தனது தாயாரின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக இலங்கைக்கு வந்த ரவிக்குமார், முன்னதாக தனது குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வசித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்த பின்னர், தனது வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு கிளையை உருவாக்கிய ரவிக்குமார், அதில் பணப்பரிமாற்ற நிலையம் ஒன்றையும் நடத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2006ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி இடம்பெற்ற பித்தளை சந்தி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தில், குறித்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பணத்தை ரவிக்குமாருக்கு சொந்தமான பணப்பரிமாற்ற நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொண்டதாக தெரிவித்ததாக சட்டத்தரணி கே.வி. தவராசா குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, குண்டுவெடிப்பு சம்பவத்துடன் நேரடி தொடர்பு இல்லாத ரவிக்குமாரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரவிக்குமாரை பொலிஸார் வெள்ளை வானில் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மொத்தமாக ஏழு பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சட்டப் போராட்டத்தின் ஊடாக, 2011ஆம் ஆண்டு ரவிக்குமார் விடுதலை செய்யப்பட்டதாக சட்டத்தரணி கே.வி. தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.