பிரித்தானிய தடை தொடர்பில் விசாரணை ; அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை
பாதுகாப்பு படையினர் உட்பட நால்வருக்கு எதிராக அண்மையில் பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் 04 இலங்கையர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் தடை விதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
அதுதொடர்பாக விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக இக் குழு நியமிக்கப்படவுள்ளது.
அதற்கமைய வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோர் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த குழுவின் பணிகளுக்கு தேவையெனக் கருதுகின்ற, இவ்விடயம் தொடர்பான நிபுணத்துவத்துவம் மிக்க வேறெந்த அதிகாரியோஃநிபுணர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவுக்கு அதிகாரமளிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.