பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குகள் நிறைவு!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குகள் நிறைவடைந்துள்ளன.
மகாராணியின் உடலம் தாங்கிய பேழை தற்பொழுது விண்ட்சர் கோட்டைக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் எடுத்து செல்லப்பட்டது.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து இலங்கை நேரப்படி பிற்பகல் 4.45 அளவில் ஆரம்பமான மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபத்தின் பூதவுடல் தாங்கிய பேழையுடனான பேரணி இலங்கை நேரப்படி இரவு 8.30இற்கு வின்ஸ்டர் கோட்டையை சென்றடைந்தது.
விண்ட்சர் கோட்டையில் மகாராணியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிப் பிரியாவிடை அளித்தனர்.
முன்னதாக மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கான அரச மரியாதை செலுத்தும் நிகழ்வு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், (Joe Biden) இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, (Droupadi Murmu) பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் (Emmanuel Macron) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாவது எலிசபெத் தமது 96 வயதில் கடந்த 8 ம் திகதி காலமனார்.
70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபத், மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் காலமானார்.
மேலும், அவருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்மொரல் மாளிகையில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது. 26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, 1952-ம் ஆண்டு அவர் பிரித்தானிய மகாராணியாக மகுடம் சூடினார். அவரது மறைவுக்கு பல நாடுகளின் அரச தலைவர்களும் அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மூத்த புதல்வரும் வேல்ஸின் முன்னாள் இளவரசருமான சார்ள்ஸ் புதிய மன்னராக நியமிக்கப்பட்டதுடன், பொதுநலவாய நாடுகளுக்குத் தலைவராகவும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.