இலங்கையில் பிரித்தானிய பிரஜையின் மோசமான செயல் ; அதிரடி காட்டிய STF
காலி - ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன பகுதியில் நேற்று புதன்கிழமை (06) பிற்பகல் அதிரடிப்படையினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

சோதனை நடவடிக்கை
ராஜகிரியவில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தலைமையகத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 280 கிராம் மற்றும் 150 மில்லி கிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர் 72 வயதுடைய பிரித்தானிய பிரஜை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.