மேக் அப் போடபோன மணப்பெண்கள் தகராறு; திருமணத்தை நிறுத்திய மாப்பிளைகள்
மேக் அப் போடபோன புதுமணப்பெண்கள் தகராறு காரணமாக மாப்பிள்ளைகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கர்னாவால் கிராமத்தை சேர்ந்த அக்காள்-தங்கை இருவருக்கு ஒரே நாளில் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது உரசிய கார்
திருமணத்திற்காக மணப்பெண்கள் இருவரும் மணமகள் அலங்காரம் செய்து கொள்ள உறவினர்களுடன் காரில் அழகு நிலையம் சென்று அலங்காரத்தை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற கார் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் உரசியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் காரில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மணப்பெண்கள் இருவரையும் காரில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவர்களின் முகத்தில் சேற்றை வாரி இறைத்தனர். இதுப்பற்றி மணமகள்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் அவர்கள் பலருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை நையப்புடைத்தனர். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திருமணம் நடைபெறும் இடத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் , இந்த வன்முறை காரணமாக மணமகன்கள் இருவரும் திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் வந்து சமரசம் செய்தபோதும் மணமகன்கள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்ட சம்பவம் அந்த கிராமத்தினர் இடையே , சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.