பாரிய அபாயத்தில் சிக்கிய நாட்டின் சுற்றுலாத்துறை
இலங்கையில் சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா கைத்தொழிற்துறையினரின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்படவுள்ளதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான சுற்றுலா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சமிர சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், நாளாந்தம் பல பகுதிகளில் தற்போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இது சுற்றுலாத்துறைக்கு நேரடியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த சம்பவங்களால் வீதியில் சுதந்திரமாகச் செல்வதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதில் இது நேரடியாகத் தாக்கம் செலுத்தக்கூடும்.
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு காரணமாகக் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.