காதலியுடன் ஓட்டமெடுத்த காதலன் ; இரவு முழுவதும் காட்டுக்குள் சித்திரவதை செய்யப்பட்ட தாய்
தர்மபுரி - அரூர் அருகே உள்ள கீழ்முறப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வம்-முருகம்மாள் தம்பதியின் மகன் சுரேந்தர் (24), பட்டப்படிப்பு முடித்து கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், கணபதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவித்ராவுடன் பள்ளி நாட்களில் நண்பர்களாக பழகி, பின்னர் காதலில் ஈடுபட்டார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களது காதல், பவித்ராவின் பெற்றோரால் எதிர்க்கப்பட்டது. இருப்பினும், சுரேந்தர் காதலை தொடர்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுக்குள் சித்திரவதை
கோவையில் இருந்து ஊருக்கு வந்த சுரேந்தரும், வீட்டில் இருந்த பவித்ராவும் கடந்த வாரம் திடீரென காணாமல் போனதால், பவித்ராவின் பெற்றோர் சந்தேகமடைந்து சுரேந்தரின் வீட்டிற்கு 20 பேர் கொண்ட கும்பலுடன் சென்றுள்ளனர்.
அங்கு இளைஞனின் தாயாரிடம் மகளை கேட்டு தாக்கத் தொடங்கிய அவர்கள், கணவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த தாயை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற கும்பல், அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இரவு முழுவதும் சித்திரவதை செய்ததாக தெரிகிறது.
குறித்த இனந்தெரியாத கும்பல் இளைஞனின் தாயாரை காலையில் நடு ரோட்டில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. காயங்களுடன் சாலையில் கிடந்த அவர், பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது கணவர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பொலிஸார் விசேட குழுவொன்றை அமைத்து சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.