தொடரூந்திலிருந்து தவறி வீழ்ந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
காலியில் இளைஞரொருவர் தொடரூந்திலிருந்து தவறி வீழ்ந்ததில் அவரது கால்கள் அதே தொடரூந்தில் சிக்குண்டு வேறாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நேற்று மாலை பெலியத்த நோக்கிச்சென்ற காலி குமாரி தொடரூந்தில் பயணித்த இளைஞரொருவர் காலி தொடரூந்து நிலையத்தில் வைத்துத் தவறி வீழ்ந்துள்ளார்.
அதன்போது தொடரூந்தில் சிக்கியதால் அவரது இரு கால்களும் வேறாகியுள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மிரிஸ்ஸ உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
தொடரூந்து காலி தொடரூந்து நிலையத்தை அண்மித்தபோது, மிதிபலகையில் பயணித்த குறித்த இளைஞர், பயணிகளின் நெரிசல் காரணமாக கீழே வீழ்ந்துள்ளதாக தொடரூந்து நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தொடரூந்து நிறுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்கள், அவரை தொடரூந்து மேடைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அதன்போது அவரது இரு கால்களும் முழுமையாக உடலிலிருந்து வேறாகியிருந்ததாக தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் அவர் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.