யாழ். செம்மணியில் பொலித்தீன் பைக்குள் மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள்
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 22 ஆவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த அகழ்வு பணிகள் இன்று மதியம் 12.30 வரை மாத்திரம் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது, புதிதாக என்புக்கூடுகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி பூரணி மரியநாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
101 மனித என்புக்கூடுகள்
அதன்படி, ஏற்கனவே, கண்டிபிடுக்கப்பட்ட 5 என்புக்கூட்டுத் தொகுதிகள் மாத்திரம் இன்றைய தினம் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கண்டிபிடுக்கப்பட்ட 101 மனித என்புக்கூடுகளில், 95 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில், சில என்புத் துண்டுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை மேலதிக நடவடிக்கைக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்தநிலையில், இன்றைய நாளுக்கான அகழ்வுப்பணிகள் இன்று மதியத்துடன், நிறுத்தப்பட்டதுடன், மீண்டும் நாளைய தினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் எனவும் பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார்.