நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ; வலை வீசி தேடும் பொலிஸார்
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து தேனாம்பேட்டை காவல்துறை மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் நயன்தாரா இல்லத்துக்கு விரைந்தனர்.
வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் வழக்கம்போல இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்களுக்கு காவல்துறையினர் வலை வீசி தேடிவருகிறார்கள். நடிகை நயன்தாரா இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் நேற்று பரபரப்பை உண்டாக்கியது.
சமீப காலமாகவே சினிமா நடிகர் - நடிகைகளை குறிவைத்து இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நடிகைகள் திரிஷா, சொர்ணமால்யா ஆகியோரின் இல்லங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
குறிப்பாக நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்துக்கு இதுவரை 20 தடவை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடத்திய சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.