மட்டக்களப்பில் பேருந்து தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம்
மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில், இன்று (ஜூன் 19) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், இவரை அடையாளம் தெரிந்தவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள வாவியையொட்டிய பகுதியில், மரமொன்றின் கீழ் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரை அடையாளம் காண முடியாத காரணத்தினால், சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.