கைவிடப்பட்ட வீடொன்றில் பெண்ணொருவரின் சடலம்; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
கிரிபத்கொட முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த பெண் நான்கு நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் பிரதேசவாசிகளிடமிருந்து பொலிஸ் அவசர பதில் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் கிரிபத்கொட பொலிஸாரால் குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் உடல் டைல்ஸ் குவியலால் மூடப்பட்டிருந்ததுடன் அது சிதைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் 35 வயதுடைராயிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.