நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று(08) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பயணப் பை, கைபேசி மற்றும் பணப் பை என்பன பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நீர்த்தேக்கத்தின் அடியில் சேற்றில் புதைந்திருந்த நிலையிலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் ஹப்புத்தளை, கஹகல்ல தோட்டத்தில் வசித்து வந்த எஸ்.பிரான்சிஸ் (46 வயது) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை பகுதியிலிருந்து தலவாக்கலையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்திருந்த இவர், பின்னர் தலவாக்கலை நகரத்திற்கு வந்து, நகரத்திற்கு அருகிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீதிவான் பரிசோதனைக்குப் பின்னர், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.