வெள்ளத்தில் காணாமல்போன மத்ரஸா மாணவர்கள் சடலங்களாக மீட்பு
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பாடசாலை மாணவர்களில் இதுவரை நான்கு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், காணாமற்போன ஏனைய இரு மாணவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது. மத்ரஸா பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சீரற்ற காலநிலை காரணமாக அந்த பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த போதும், அதற்குள் அம்பாறை கல்முனை பிரதான வீதி மற்றும் மாவடிப்பள்ளி பாலத்தின் இருபுறமும் மழைநீர் நிரம்பியிருந்தது.
இதன் காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் சிறுவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதன்போது சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள் ஏறியதுடன், மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளம் சூழ்ந்த வீதியின் ஊடாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.
உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், அவர்களில், 5 மாணவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததுள்ள போதிலும், ஏனையவர்கள் நீரில் அடித்துச் சென்று காணாமல் போயிருந்தனர்.
12 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரே காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் 04 மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.