யாழில் 38 வருடங்களின் பின் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்கள்
யாழில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது ஒரு வீட்டின் கீழ் புதைக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் குழந்தையின் உடல்கள், 38 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அந்தப் பெண்ணும் குழந்தையும் இறந்துவிட்ட நிலையில் அப்போது வேறு வழியில்லாமல் கணவர் அவர்களை வீட்டின் கீழ் புதைத்துள்ளார்.
நீதிமன்றில் மனு தாக்கல்
அந்த நபர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு சென்று, அங்கு தஞ்சம் புகுந்துள்ளார்.
சமீபத்தில் யாழ்ப்பாணம் திரும்பிய அந்த நபர், தனது மனைவி மற்றும் குழந்தையின் உடல்களை தோண்டி எடுத்து, மத வழக்கப்படி முறையான அடக்கம் செய்யக் கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மேல்முறையீட்டையும், பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான அறிக்கையையும் கருத்தில் கொண்டு, உடல்களை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் மத வழக்கப்படி திங்கட்கிழமை (24) அடக்கம் செய்யப்பட்டுள்ளன.