அல்லாஹ்வை இழிவுபடுத்தியவருக்கு, அல்லாஹ்வின் மாளிகையில் கௌரவமா?
"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். ரொம்ப நல்லவன் பா " என்ற வடிவேலின் நகைச்சுவை வரிகளுக்கு எம்மவர்கள் உயிர்கொடுத்துள்ளார்கள்.
ஞானசார தேரர் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணிலடங்காத அட்டூளியங்களை செய்தவர். அளுத்கமை கலவரம் தொடக்கம் இன்று வரை அவருடைய செயற்பாடுகள் தொடர்வதை அவதானிக்க முடிகிறது.
பல கோடி மக்கள் இறைவனாக ஏற்றுள்ள அல்லாஹ்வை மிக இழி சொல் கொண்டு வஞ்சித்திருந்தார். இவரோடு நாம் உறவு பாராட்டுவது பொருத்தமானதல்ல. எம்மவர்களோ றபான் அடித்து அவரை வரவேற்பதை பார்க்கும் போது மிக வேதனையாக உள்ளது.
ஞானசார தேரர் குறித்த செயலணிக்கு உள்வாங்கப்பட்டமையை பேரினத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலர் ஏற்க மறுத்துள்ளனர். குறிப்பாக முஸ்லிம்களாகிய நாம் ஏற்கவே கூடாது.
இந் நிலையில் இவரை பள்ளிவாயல் அழைத்து சென்று, படம் காட்டியதன் மூலம், அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை நாம் ஏற்றுள்ளதாகவே பொருளெடுக்க முடியும்.
இவருக்கு வழங்கிய வரவேற்பானது பேரின ஊடகங்களில் பெரு வரவேற்பை பெற்றிருந்தது. அது கூறும் செய்தி என்ன என்பதை, நாம் இன்னுமேன் உணர மறுக்கின்றோம். எம்மை இந் நிலைக்கு தள்ளியதில் ஜனாதிபதி கோத்தாபாயவின் செயற்பாடு பிரதான காரணமாகும்.
அவர் இவரை தலைவராக நியமிக்காது போனால் இத்தனையும் நடந்தேறி இருக்குமா? நாம் இறைவனாக ஏற்றுள்ள அல்லாஹ்வுக்கே ஏசிவிட்டு, எமது பகுதிக்குள் படை பட்டாளங்களோடு புகும் நிலையை அவர் தானே ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
அவரை இன்று வரை ஆதரிக்கும் சுயநல அரசியல் வாதிகளை என்னவென்று சொல்வது? இதனைக் கூட தடுக்க வக்கற்றவர்களாக உள்ளனரே! கேட்டால், உலகத்தையே புரட்டி சாதிப்பதான பேச்சு வேறு. இறை சாபம் நிச்சயம் ஒரு நாள் இவர்களை சூழ்ந்தே தீரும். இவற்றை சாதிக்காதவர்கள், வேறு எதனைத் தான் சாதித்துவிடப் போகிறார்கள்? இவருக்கு வரவேற்பு வழங்கியவர்களில் சுன்னத் ஜமாத் அமைப்பினை சார்ந்தோரையே அதிகம் காணக் கிடைத்தது.
ஞானசார தேரர் ஒருபோதும் இவ் அணியினரை எதிரியாக கருதவில்லை என்பது உண்மை. ஞானசார தேரர் இழிவாக பேசும் அல்லாஹ்வே இவர்களுக்கும் அல்லாஹ் என்பதை மறந்துவிட்டார்களா? அந்த அல்லாஹ்வை இழி சொல் கொண்டு பேசியது இவர்களின் உள்ளத்தை தைக்கவில்லையா? எமது முஸ்லிம் சமூகத்தினுள் உள்ள இயக்க வேறுபாடுகள் வேறு. அது அண்ணன், தம்பி பிரச்சினை.
அதற்காக அல்லாஹ்வை இழிவுபடுத்தியவரோடு என்ன இணக்கப்பாடு? எவ்விடயத்திலும் இராஜதந்திரமாக செயற்பட வேண்டுமென சிலர் கூறுவதை அவதானிக்க முடிகிறது. அதுவும் சிந்திக்கத்தக்க விடயமே! X எனும் நபருடைய தாயை, வேசையென Y எனும் நபர் கூறுகிறான்.
தன் தாய் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைக்கும் வரை X இற்கும் Y இற்கும் இடையிலான உறவு எவ்வாறு அமையும் என்பது யாவரும் அறிந்ததே! தன் தாயின் களங்கம் துடைக்கப்படும் வரை X எனும் நபர் Y ஐ ஏற்கவே மாட்டான்.
வேறொரு தேவைக்காக X ஆனவர் Y ஐ எவ்வித கூச்சமுமின்றி வரவேற்றால் நாம் ஏது சொல்வோம். அல்லாஹ் ஒரு தாயைவிட 70 மடங்கு அன்பானவன் என்பதை மறக்க இயலுமா? இந்த நிகழ்வானது அல்லாஹ்வின் மீதான ஞானசாரரின் குற்றச்சாட்டுக்களுக்கான தெளிவுகளை வழங்க என்றால் நாம் விமர்சிக்க முடியாது.
அது தேவையானதே! அவர் அல்லாஹ் மீதான இழி விமர்சனங்களை செய்த போது யாருமே அவரோடு பேச முனையவில்லையே! அதனை நோக்கி நகர்த்துவோம். அது ஒரு முஸ்லிமுக்கு கடமையும் கூட. இப்போது அவர் வேறொரு விடயதானத்திற்கு வந்துள்ளார். அல்லாஹ் மீதான குற்றச்சாட்டிலிருந்து அவர் தெளிவு பெறும் வரை, அவரோடு எம்மவர்கள் எந்த உறவும் பாராட்ட வேண்டிய அவசியமில்லை.
அல்லாஹ் மீதான இழி விமர்சனங்களை சகித்துக்கொண்டு, நகர்த்தப்படும் இராஜதந்திரங்களில் அல்லாஹ்வின் பறக்கத் இருக்குமா? அல்லாஹ் மீதான இழி விமர்சனங்களை சகித்துக்கொண்ட சாதனைகள் அவசியம் தானா? எமது வாழ்வே அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே என்பதை நினைவில் கொள்வோம் துறையூர் என ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், முகநூலில் பதிவிட்டுள்ளார்.