கறுப்பு ஜுலை கலவரத்தை மறக்கபோவதில்லை; உமா குமாரன்!
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் புலம்பெயர் தமிழரும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமாரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன், உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் ,
தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கம்
1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி நேற்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன.
தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும் , தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ நிலைநாட்டப்படவில்லை.
கறுப்பு ஜுலை கலவரங்களை அடுத்து தமிழ்மக்கள் உலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாகவும் அவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்கள் என்ற போதிலும் போரின் விளைவாக பிரிட்டனுக்குப் புலம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
உளவியல் ரீதியான பாதிப்பு
கறுப்பு ஜுலை கலவரங்களின்போது இடம்பெற்ற கொடுமைகள் குறித்து தனது பெற்றோர் தனக்குக் கூறியிருப்பதாக தெரிவித்துள்ள உமா குமாரன், அக்கலவரங்களினால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நினைவுகூருவதாகவும், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதலாவது தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டவர் உமா குமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.