ஈரானுக்குப் பதிலாக ஐரோப்பா, சீனாவிலிருந்து தார் இறக்குமதி ; வீதி அபிவிருத்திப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
இலங்கைக்குத் தேவையான தார் தொகைகள் ஐரோப்பா மற்றும் சீனாவிலிருந்து கிடைக்கப்பெற்று வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுனில் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், இலங்கையின் வீதிப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான தார் பெரும்பாலும் ஈரானிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு வந்தது.

எனினும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக தார் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தார் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருந்தது.
இதனையடுத்து, சீனா, ஐரோப்பா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தார் மாதிரிகளை அரசாங்கம் வரவழைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இதற்கமைய, குறுகிய காலத்திற்குள் நாடளாவிய ரீதியில் வீதி அபிவிருத்திப் பணிகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.